onsdag den 29. september 2010

ஒரு கவிதை

ஒரு கவிதை

நான் கவித்திருந்த போதுகளில்
பாரதி நிற்பதுவும் பறப்பதுவுமாயிருந்தான்.
சுகித்திருந்த போது
பலர் சோகித்திருந்தார்கள்.
சோகித்திருக்கையில்...
எனக்குக் கண்ணீருக்குப் பதிலாகப் புன்சிரிப்பு வந்தது.
எப்பொழுதுமே நான் எதிர்மாறாய்த்தான் இருக்கிறேனாக்கும்.
இப்பொழுது நான்
மோகித்திருக்கிறேன்.
இதற்கு எதிர்மறையாய்..நீங்கள் எப்படி இருப்பீர்கள்..?
நண்பன் நம்பி
கங்கையில் கவியெழுதும் பாவத்தைக் கரைக்கப்போகிறானாம்.
சசி பேர் சொல்லியே
கலாப்ரியா முழுதாய் நிரந்தரக் கவியானான்.
பிரபஞ்சம் தேடிய பிரமிளுக்கு...என்ன கிடைத்திருக்கக்கூடும்.
கண்ணாடியுள்ளிருந்து
கவிதையாக இருக்காத பட்சத்தில்
எத்தனையோ பேர்களுக்குக் காதல் தோல்வி.
மனிதனாய் இருக்காத பட்சத்தில்
பலருக்குக் கவிதைத் தோல்வி.
கவியாயுமிலாது மனுவாயுமிலாது
தவித்து சுகித்து சோகித்து மோகித்து
தகித்து துதித்து
பாதித்துப் பாவியாய்ப் பாழாய்ப்
புழுதியில் புரள்கிறதே பார் நல்லதோர் வீணை.

உள்ளே கனன்று
முகத்தால் மிக வாடி..
மூளாத் தீ போல
மீழாத் துயரினிலுழ(ள)லும்
என் மனக் கொக்கிற்கு
ஈழம் என்று பெயர் வை.

விண்டவர் கண்டிலர்.
கண்டவரோ மண்ணேகினர்.
விண்ணும் மண்ணும் விரிந்து கிடக்க..
விளலுக் கிறைத்த நீராய்..
என் ஒளி படைத்த கண்களை
வீணே வீசுதற்குப் புரிகுவையோ...?
போயின போயின காண்
பல்லாயிரம் கண்கள்.
பண்ணுடைந்த பாலன் போலானானே.

சொல்லிலடங்காச் சோகத்தை
என்னுள்ளே விதைத்தவர் யார்..?
வான ஓட்டையினை அடைக்க முற்பட்டோரா..?
கூரையேறிக் கோழி பிடிக்கத் தெரியாதோரா ..?
சும்மா இருவென்ற யோகிகளா..?
பசித்திரு விழித்திருவென்ற வள்ளலாரா..?
வாழ்வைக் கொண்டாடென்ற ஓஷோவா..?
ஞான் பறையும் போழ் எனும் கேரள நங்கையரா..?
ஏன் இங்ஙனம் மென்மையுடை மானிடனாயானேன்...?
நெஞ்சு பொறாச் சோகம்
எங்ஙனம் புகுந்ததென் வாழ்வில்..?
இனியும் நான் பாடுதல் கூடுமா...
என் சொத்தென இருக்கும் பாடல்களை,
எங்கோ விற்று
என் நிலமெழுதிய கவிதைகளையும் கண்மணிகளையும் ஏலம் போட்டு...
இக் கொடுஞ் சேதி வருமுன்னே
இறந்து போவதற்கு வல்லமை தாராயோ பராசக்தி.

############
நன்றி.
விக்ரமாதித்தியன் நம்பி. (காசிக்குப் போய் கவிதையெழுதுவதை விடப்போகிறாராம்.)
கலாப்ரியா.(சசிகலாவின் காதல் தோல்வியில் மனமுடைந்த கவிஞர்.)
ப்ரமிள்.(ஐன்ஸ்டீனின் பிரபஞ்ச தத்துவத்தில் அதிக நாட்டமுள்ளவர், கண்ணாடியுள்ளிருந்து அற்புதமானகவிதைத் தொகுப்பு.)
தா.பாலகணேசன். (பண்ணுடைந்த கடலாள்)
மற்றும்,
பாரதி, சுந்தரர், திருமூலர்.

søndag den 26. september 2010

love

அன்பின் அடிக்குறிப்பு.................
அன்பிற்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை.
அதுதான் அன்பின் அழகு.
அதுதான் அன்பின் சுதந்திரம்.
வெறுப்பு ஒரு பந்தம்.
ஒரு சிறை.
உங்கள் மீது திணிக்கப்படுவது.
வெறுப்பு வெறுப்பையே உருவாக்கும்.
வெறுப்பையே கிளறிவிடும்.
ஒருவரை நீங்கள் வெறுக்கும் பொழுது அவர் மனதில் உங்களுக்கெதிரான வெறுப்பை உருவாக்கி விட்டுவிடுவீர்கள்.
உலகமே வெறுப்பிலும் அழிவிலும் வன்முறையிலும் போட்டியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஒருவர் குரல்வளையை ஒருவர் நெரித்துக் கொண்டிருக்கிறார்கள். செயலாலோ மனதாலோ ஒவ்வொருவரும் மற்றவரைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான் ஒரு சொர்க்கம் ஆகக்கூடிய இந்த உலகை நரகமாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.
அன்பு செய்யுங்கள்.
இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாகும்.
அன்பின் எல்லையற்ற அழகே..அதற்கு அடிக்குறிப்பு தேவையில்லை என்பதுதான்.
அன்பு காரணமில்லாது நிகழ்வது.
அது உங்கள் பரவச வெளிப்பாடு.
உங்கள் இதயத்தின் பகிர்வு.
உங்கள் இருப்பின் பாடலைப் பங்கிட்டுக் கொள்வது.
உங்கள் மகிழ்வைப் பகிர்ந்து கொள்வது.
உண்மை அன்பு உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியின் இடையறாத வெளிப்பாடு. அதைப் பகிர்ந்து கொள்வதற்கும், பொழிந்து கொள்வதற்கும்
பகிர்ந்து கொள்ளும் மகிழ்விற்காகவே பகிர்ந்து கொள்வது.
காலையில் பறவைகள் பாடுகின்றன.
ஒரு குயில் தூரத்திலிருந்து அழைக்கிறது.
காரணம் இல்லாமல்தான்.
இதயத்தில் நிறைந்த மகிழ்ச்சி ஒரு பாடலாக வெடித்துப் பீரிடுகிறது.
நான் சொல்லும் அன்பு அதுவே.
அப்படிப்பட்ட அன்பின் பரிமாணத்திற்குள் நீங்கள் பிரவேசிக்க முடியுமானால்..அதுவே சொர்க்கம்.
அப்போது நீங்கள் பூமியில் ஒரு சொர்க்கத்தைப் படைத்து விடுவீர்கள்...!!